புறநானூறு 189
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
தெளிந்த கடல் நீர் சூழ்த்த நிலம் அனைத்தையும் பொது நலன் இன்றி ஒற்றை வெண்குடையின் கீழ் ஆட்சி செய்யும் பெரிய மன்னனும், நள்ளிரவும் பகலும் தூங்காமல் காட்டில் மாக்களை காவல் செய்யும் கல்லாத பாமரனும், உண்ணும் உணவு நாழி (a measure of volume) அளவே, உடுத்தும் ஆடையும் இரண்டே, என எல்லாம் ஒரே அளவுதான். எனவே ஈட்டிய பொருளை பிறருக்கு கொடுக்காமல் தாமே அனுபவிக்க நினைத்தால் அதனால் வரும் துன்பங்கள் பலவே.
"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பாக்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தம்புந பலவே"