Tuesday, March 18, 2014

நாட்டுப்புறப் பாடல் 

வழக்கத்தில் இருந்த இடம் : சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்

சேகரித்தவர்: S.M. கார்க்கி

பெண் பாடுதல்:

"நறுக்குச் சவரம் செய்து
நடுத் தெருவே போறவரே
குறுக்குச் சவளுறது
கூப்பிட்டது கேட்கலையோ?
சந்தனவாழ் மரமே
சாதிப்பிலா மரமே
கொழுந்தில்லா வாழ் மரமே
கூட இருக்கத் தேடுதனே

உருகுதனே உருகுதனே
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
கண்டிட்டு உருகுதனே
நிண்ணு சொல்ல மாட்டாம
நில்லுங்க ராஜாவே
நிறுத்துங்க கால் நடய
சொல்லுங்க ராஜாவே
சோலைக்கிளி வாய்திறந்து

வடக்கிருந்து வந்தவரே
வருச நாட்டுப் பாண்டியரே
தொட்டிட்டு விட்டியானா
துன்பங்களும் நேர்ந்திடுமே
தேனும் தினைமாவும்
தெக்குத் தோப்பு மாம்பழமும்
திரட்டிக் கொடுத்திட்டில்ல
தேத்துதாரே எம் மனசை

கோடாலிக் கொண்டைக்காரா
குளத்தூருக் காவல்காரா
வில்லு முறுவல் காரா
நில்லு நானும் கூடவாரேன்
துத்தி இலை புடுங்கி
துட்டுப் போல் பொட்டுமிட்டு
ஆயிலிக் கம்பெடுத்து
ஆளெழுப்ப வாரதெப்போ?"

Thursday, February 27, 2014

தமிழுரை - அறிவுமதி, எழிலுரை - டிராட்ஸ்கி மருது

#தங்கத்தமிழ் , #Arivumathi , Trotsky Marudhu , Vikatan EMagazine

தமிழுரை - அறிவுமதி, எழிலுரை - டிராட்ஸ்கி மருது

"கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்"

(குறிஞ்சி - தலைவி கூற்று)
- கபிலர், குறுந்தொகை 38

காட்டுமயில் கற்பாறைகளில் இட்டுவைத்த
முட்டையொன்றை
வெயில்குளிக்கும்
கருங்குரங்குக்குட்டியொன்று
உருட்டிக்கொண்டிருக்கிறது.

குறுந்தொகையின் இந்த இரண்டு வரிகளுக்கு
இவ்வளவுதான் பொருளா?

இல்லைங்க.

இதற்குள் இருக்கும் பழந்தமிழர்தம் பல்லுயிர் சார்ந்த
அறிவியல் மூளையின் ஆற்றலை அறிந்தால்
அசந்துபோவீங்க.

ஆமாங்க.

இந்த முட்டையை இட்ட தாய் மயில்
என்ன ஆனது... தெரியல.
எங்கே போனது... புரியல.

தனித்துக்கெடக்குது
அந்த மயில் முட்டை.

தவித்துப்போகிறான் புலவன்.
வாழவந்த புலவன்தான். ஆனாலும் வாழ்ந்து கண்ட புலவன்.
அதனை அழகா எடுத்து ஒரு சிறிய குரங்குக்குட்டியோட
கையில் கொடுக்கிறான்.

அய்யோ... அய்யோ... அறிவுள்ள யாராவது... அத
அந்தக் குரங்குக்குட்டிகிட்டபோயி கொடுப்பாங்களா?

அது ஒடச்சிடுமே... அது ஒடச்சிடுமே!

நீங்க பயப்படுவீங்க.
ஏன்னா, நீங்க நாட்டுல வாழுறவங்க.
பயணங்கள்ல
ஊர்திகளை நிறுத்தி நிறுத்தித் தின்பண்டங்களைக் கொடுத்து
குரங்குகளைப் பிச்சைக்காரர்களா மாத்தினவங்கதானே.
ஏன்... அந்தமானில் வாழும்
பழங்குடி மக்களையும் அப்படித்தானே!

ஆனா... அந்தக் கபிலக் கிழவன் பயப்படலிங்க
அவனுக்குத்தான் காடு தெரியுமே; மலை தெரியுமே.
அவன் நம்மப்போல மனிதர்களுக்கான உலகத்துல
வாழப் பழகலயே.
உயிர்களுக்கான உலகத்துல வாழ்ந்த தமிழர்களோட அல்லவா
வாழப் பழகியிருக்கான்.

அதனாலதாங்க
அது கையில துணிச்சலாத்
தூக்கிக் கொடுத்துட்டான்.

அது என்ன செய்யுது?
மாலை வெப்பம் ஊறிய வழுவழுப்பான
பாறையில
ஒரே சீரா... அந்த மயில் முட்டைய
அது உருட்டிக்கிட்டிருக்கு.

அப்படின்னா...

ஒரு முட்டை குஞ்சு பொரிக்க... அதுக்கு என்னங்க வேணும்?
தாய் அந்த முட்டையின் மீது அமர்ந்து
அதன் அடிவயிற்றுச் சூட்டைத் தரவேணும்.
அதுதான் அந்த முட்டைக்குக் கிடைக்க வாய்ப்பில்லையே.

அப்படின்னா... அது குஞ்சு பொரிப்பதற்கான
சூடு?

அதாங்க... அந்தப் பாறையோட வெப்பச் சூட்டுல
அந்தக் குட்டி உருட்டுதுல்ல.
அந்தப் பாறை வெப்பத்தையே தாயின் அடிவயிற்றுச் சூடா
வாங்கி... வாங்கி...
அந்த முட்டை குஞ்சு பொரிக்குங்கிற
அறிவியல்நுட்பத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய
அந்த மூளை... எவ்வளவு எளிமையாச் சிந்திச்சிருக்கு பாருங்க!

ஆ. விகடன்
05-Feb-2014

Saturday, February 15, 2014

- கபிலர், குறுந்தொகை - 361

#தங்கத்தமிழ் , #Arivumathi , Trotsky MarudhuVikatan EMagazine

- கபிலர், குறுந்தொகை - 361

"............... அவர்மலை
மாலைப் பெய்த மணங்கமழ் உந்தியொடு
காலை வந்த காந்தள் முழுமுதல்
மெல்லிலை குழைய முயங்கலும்
இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே"

(குறிஞ்சித் திணை - தலைவி கூற்று)

---

இவளது 'காதல்காரன்’ கொஞ்சம் தூரத்திலிருக்கிறான்.

எவ்வளவு தூரத்திலா..?

நேற்று மாலை அவனது மலையில் பெய்த மழை
இன்று காலை இவளது ஊரின் வழியே
வெள்ளமாய் வந்து கடந்து போகும்
தூரத்தில்.

அந்த வெள்ளம் பார்க்கத்தான்
வந்தாள் இவள்.

அவ்வப்போது வந்து வந்து உயிர் நசுங்க நசுங்க
அணைத்துப்போன அந்த வால் பயலின் நினைவு
உணர்ச்சி வெள்ளமாய்ப் பெருகி
இவளை
உடைக்க முயன்ற நொடியில்...

அதோ...
அந்த வெள்ளத்தில்
அவன் மிதந்து வருவதைப்
பார்த்துவிட்டாள்.

விடுவாளா?

ஓடிப்போய்... இழுத்துப்போகும் வெள்ளத்திடமிருந்து
அவனைப் பிடுங்கிக் கொண்டுவந்து
இறுகத் தழுவித் தழுவித் தழுவி
முத்தமிட்டு முத்தமிட்டு
மூர்ச்சையுறும் நேரத்தில்

உற்றுப் பார்த்தாள். பார்த்தால்...
அவனா... அவனா அது... இல்லை... இல்லை.
வேரோடும் பூவோடும்
வெள்ளம் பிடுங்கிவந்த அவனது மலையின்
ஒரு காந்தள் செடி!

அவனாய்... அதை
அவள் தழுவிய தழுவலில்...
அவனது ஆடைகளின் கசங்கல்களாய்
அதன் மெல்லிய இலைகள்
குழைந்துவிட்டன.

அதன் பிறகும்... அவனையே
வீட்டிற்கும் அழைத்து வருவதாய்
அந்தக் கார்த்திகைச் செடியை
துணிச்சலாய் அவள்
எடுத்து வந்தாள்.

அதன் கிழங்கை
அம்மா பார்க்கப் பார்க்கவே
வீட்டின் முன்
நட்டுவைத்தாள்.

அந்தக் கிழங்கு... தலைவனின் நம்பிக்கையாய்
முட்டிமோதி முளைத்துச்
செடியாகும்.

செடி
அரும்பு வைத்துப்
பூக்கும்.

அம்மா... அந்தப் பூவை வெறும்
காந்தள் பூவாகத்தான்
பார்ப்பாள்

இந்தக் காதல்காரியோ... அந்தப் பூவை
காதலனின் முகமாய்ப்
பார்ப்பாள்.

பார்க்கட்டுமே!

தமிழுரை - அறிவுமதி
எழிலுரை - டிராட்ஸ்கி மருது.

Feb 14, 2014

காட்டாறு போல் பாயும் இந்தக் காதல் 

கால் நனைத்து யாரும் மீண்டதில்லை 


கரை தாவி எவனும் கடந்ததும் இல்லை 

இதன் பாதை மறிக்க 


எந்தப் பரமனும் இல்லை 


காலம் தோன்றும்-மாயும் 


காதல் கரைபுரண்டே பாயும்
-ச

மழை

ஊர் தூங்கிப் போனாலும்

தூங்காமல் பெய்யும் மழை

போதும் என்ற போதும்

போகாமல் நையும் மழை


- ச