Saturday, July 17, 2010

இயற்பியல் வி(த்)தை

முன் இடுக்கையில் சொன்ன அதே Orientation Program. இறுதி நாள் கலந்தாய்வில் மதிய உணவைப் பெற்றுக்கொண்டு நாங்கள் 250 புதிய மாணவர்களும் (புதிய அமெரிக்க மாணவர்களும் சேர்ந்துகொண்டனர்) பெரிய அரங்கம் ஒன்றில் நுழைந்தோம். அரைவட்ட அரங்கில் சினிமா தியேட்டர் போல் இறங்கிச் சென்றால் பள்ளத்தில் பெரிய மேடையும் கரும்பலகையும் இருந்தது. pizza -வையும் side dish -களையும் ஏந்திக்கொண்டு முன் வரிசை இருக்கைக்குச் சென்று அமரப் போனேன். அருகில் போகும் போதுதான் கிலி எடுத்தது. ஏதோ Home Alone வீட்டிற்குள் நுழைவது போல இருந்தது. 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் அப்பு டெல்லி கணேஷை  கொல்வதற்குப் போட்ட setup மாதிரியே தெரிந்தது. 

மேடையில் கலர் கலராக பலூன்கள் பறந்துகொண்டிருந்தன, அடுப்பு எரிந்துகொண்டிருந்தது, எங்கு பார்த்தாலும் கரண்ட் வயர்களாக கிடந்தன, தேவலோகத்தில் புகைவது போல ஜாடிகள் புகை கக்கிக் கொண்டிருந்தன, முள் செருப்பு, முள் படுக்கை, சோடா பாட்டில், மெழுகுவர்த்தி, சுத்தியல், dumb bell , எலும்புக் கூடு, தவில் (drum) என்று மேடை முழுவதும் சம்பந்தம் இல்லாத பொருட்கள் குவிந்திருந்தன. கொஞ்சம் ஜெர்க் ஆகி நான்கு வரிசைகள் பின்னாடி தள்ளி அமர்ந்து கொண்டேன். 

அனைத்து மாணவர்களும் அரங்கம் நிறைத்து அமர்ந்து பேசிக்கொண்டு உண்டுகொண்டு இருந்தபோது நிகழ்ச்சி தொடங்கியது. காதைக் கிழிக்கும் ஒரு விசில் சத்தம், பால் குக்கரில் வருவதுபோல். பொறை ஏறித் திரும்பிய கணத்தில், மேடையின் பின்பக்கத்தில் இருந்து திரையை கிழித்துக்கொண்டு ஒரு பப்பூன் ராக்கெட் சைக்கிளில் காலை விரித்துக்கொண்டு பாய்ந்து மேடையை ஒரு வட்டமிட்டு வந்து நின்றார். அந்த சைக்கிளில் pedal இல்லை, பதிலாக பின்பக்கம் இரண்டு குட்டி cylinder-கள் ஏவுகணை போல் எதையோ கக்கிக்கொண்டு இருந்தன. அதன் உந்துதலில் தான் அவர் சைக்கிள் பாய்ந்து வந்தது. திரைக்குப் பின் இருந்து அதை ஏவிய இரண்டு மாணவர்கள் ஓடி சைக்கிளை பிடித்து நிறுத்தி புகை கக்கிய ராக்கெட்டை அணைத்தனர். விசில் சத்தம் அடங்கியது. ("இன்னைக்கு சாப்பிட்ட மாதிரிதான்!" என்றது என் mind voice) 

இறங்கியவர் பப்பூன் வேஷத்தைக் கலைத்துவிட்டு, "இவர்கள் என் மாணவர்கள், நான் ஒரு இயற்பியல் விஞ்ஞானி", என்று பெயர் சொல்லி அறிமுகப்படுத்தினார் (பெயர் ஞாபகம் இல்லை). Mr. Bean -ஐ நேரில் பார்த்தது போல் இருந்தது. அனைவரும் சிரித்துக் கைதட்டினர். "I know, you guys don't believe it" என்று சொல்லிவிட்டு ஒரு scientist coat -யும், ரோஸ் கலர் ஐன்ஸ்டீன் விக்கையும், மெல்லிய கையுறையையும் மாட்டிக்கொண்டு  மீண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டார். எல்லோரும் சாப்பிடுவதை மறந்து விட்டோம். 

ரப்பர் குண்டு ஒன்றை நிலத்தில் அடித்து விளையாடிக்கொண்டே  தமாசாக அறிவியல் முன்னுரை வழங்கி, இந்த வகுப்பில் அறிவியல் மீது உள்ள பயத்தை போக்கப்போவதாகச் சொன்னார். சொல்லி முடிக்கும்போது அந்த ரப்பர் தவறுதலாக புகைந்துகொண்டு இருந்த ஜாடிக்குள் விழுந்தது, அதை எடுத்தவர் பேசிக்கொண்டே வலது பக்கச் சுவற்றில் வீசி அடித்தார். கண்ணாடி பல்பு உடைவதுபோல் தூள் தூளாக நொறுங்கி விழுந்தது. "Did I scare you?" என்று முன் வரிசையில் வலது கோடியில் அமர்ந்திருந்த சீனாக்காரியைக் கேட்டார். "இல்லை" என்று புன்னகைத்தாள். 
Fact : அந்த ஜாடிக்குள் இருந்தது liquid nitrogen (-196o). நம் மூச்சில் கலந்திருக்கும் nitrogen, -196oC இல் தான் திரவமாகக்கூடும். நாங்கள் ஆய்வுக்கூடத்தில் பயன்படுத்தும் மிகக்குறைந்த வெப்பநிலை இதுதான். It's not a toxic or flammable. திறந்து வைத்தால் வெள்ளையாக புகைந்து (ஆவியாகிக்) கொண்டே இருக்கும்.  ஆனால் இந்த வெப்பநிலையில் திரவத்தில் படும் பொருட்கள் உறைந்து இறுகிவிடும். No more flexibility. Liquid nitrogen நம் உடலில் பட்டால் மிகக் குறைந்த வெப்பநிலையால் அணுக்கள் செத்து, தீ சுட்டது போல் ஆகிவிடும். சென்றவாரம் நான் ஒரு விழுப்புண் பெற்றேன். 

அந்த ரப்பர் குண்டை வேண்டுமென்றேதான் ஜாடிக்குள் எறிந்திருக்கிறார். அதன் பின் வாழைப் பழம், நூல்கண்டு, என சில பொருட்களை liq. Nஇல்  முக்கி எடுத்து கண்ணாடி போல் நொறுக்கிக் காட்டினார். அடுத்து ஒரு ரப்பர் பந்தை நனைத்து எடுத்து வலப் பக்கமாக மேடையில் உருட்டிவிட்டார் ஒன்றும் ஆகவில்லை. இறுதியாக தன் விரலை உள்ளே விடப்போவதாகச் சொல்லி, கையுறையோடு விரலை விட்டு சிறிது நேரம் தமாசு பேசிவிட்டு வெளியே எடுத்தார். ஒரு சுத்தியலை எடுத்து தன் ஆள்காட்டி விரலின் மீது ஓங்கி அடித்தார். விரல் தூள் தூளாக நொறுங்கியது. வாய்பிளந்து மௌனம் ஆனோம். மெதுவாக மடக்கி வைத்திருந்த விரலை வெளியே நீட்டினார். நொறுங்கியது வெறும் கையுறை. ("முடியல!").

"இதுமாதிரி பல வித்தை செய்துதான் என் மனைவியை மயக்கிக் கல்யாணம் செய்தேன்" என்று சொல்லிக் கொண்டு ஒரு நீளமான மெழுகுவர்த்தியை கொளுத்தி பறந்து கொண்டிருந்த பலூன்களை ஒவொன்றாக உடைத்தார். Helium வாயு நிறைந்திருந்த பலூன்கள் டப் டப் என்று சாதாரணமாக உடைந்தன . Nitrogen வாயு பலூன்களும் சாதாரணமாக உடைந்தன. Oxygen பலூன் கொஞ்சம் ஆக்ரோசமாக உடைந்தது. கடைசியாக ஒரு பலூன் மட்டும் உடைந்து தீப் பற்றி அணைந்தது. Hydrogen வாயு தீப் பற்றிக்கொள்ளும் என்று விளக்கினார்.

அடுத்து நம்ம ஊர் கருப்பராயன் கோவிலில் இருப்பது போல் ஒர் ஆணிச் செருப்பு. அவர் அணிந்திருந்த Shoe - Socks -களை கழற்றிவிட்டு அந்த செருப்பின் மீது ஏறி நின்றார். கொஞ்சமாக குதித்தார். அப்புறம் ஒரு பெரிய ஆணிப் படுக்கை. அதை மேசை மேல் வைத்து அதில் ஏறிப் படுத்துக்கொண்டு பார்வையாளர்களில் இருந்து ஒரு மாணவியை அழைத்தார். மாணவி கொஞ்சம் குண்டாக இருந்ததால் திருப்பி அனுப்பி நகைச்சுவை செய்துவிட்டு, இன்னொரு மாணவியை அழைத்தார். 50 கிலோ எடை இருக்கக் கூடும். தன் வயிற்றின் மேல் ஏறி நிற்கச் சொன்னார்.  சிறிதும் யோசிக்காமல் நாற்காலி மீது கால் வைத்து, மேசை மீது ஏறி, அவர் வயிற்றின் மீது ஏறி நின்றார் அந்த அமெரிக்க மாணவி. 
Fact : ஆணிச் செருப்பின் மீது நிற்கும் போது நம் எடை நூற்றுக்கணக்கான ஆணி முனைகளின் மீது சமமாகப் பரவுகிறது. Weight on an unit area (ஓர் ஆணி முனை) குறைகிறது. எனவே அது ஒரு அக்குப்பன்ஜர் செருப்பு போல் தான் இருக்கும். வலிக்காது. நம்ம ஊர் பூசாரிகளை ஒரே ஒர் ஆணி மீது ஏறி நிற்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். நெற்றிக்கண் திறந்து சபித்து விடுவார்கள். 

பின் அதே மாணவியிடம் மூன்று சிமென்ட் கற்களை தன் வயிற்றின் மீது வைக்கச் சொல்லி பெரிய சுத்தியலால் உடைக்கச் சொன்னார்  அம்மணி பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு கரெக்டாக உடைத்தார்.
Fact : அடுக்கான பொருட்களை வேகமாக அடிக்கும் போது energy அடுத்த பொருளுக்குப் போகும் முன்னர், முதல் பொருள் குறிப்பிடத்தக்க energy -ஐ உடைவதர்காக செலவிட்டுவிடுகிறது. எனவே அடுத்து உள்ள பொருளுக்குப் பாதி சக்தி தான் போய்ச் சேரும். மெதுவாக அதே அளவு energy -ஐ கொடுத்தால் அடுத்த உள்ள பொருளுக்கு energy பரவ போதிய நேரம் கிடைக்கிறது. உதாரணம்: மூன்று அல்லது நான்கு நூல் கயிறுகளை நீளமாக இணைத்து முடிந்துகொள்ளுங்கள். ஒரு முனையை ஜன்னல் கம்பியில் கட்டிவிடுங்கள். இன்னொரு முனையை பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாக இழுங்கள் நான்கு நூல்களில் எது அறுந்து போகும்? Equal chance. எது வேண்டுமானாலும் அறுந்து போகலாம். அனால் வெடுக்கென்று வேகமாக இழுத்துப் பாருங்கள். நிச்சயமாக உங்கள் கையின் அருகில் இருக்கும் முதல் கயிறு தான் அறுந்து போகும். "நல்லதம்பி" படத்தில் NSK ஒரு தண்ணீர் குவளைக்கு அடியில் வாழை இலையை வைத்து தண்ணீர் சிந்தாமல் இலையை உருவுவதும் இதே அறிவியல் விதியின் படிதான்

சில கண்ணாடி பாட்டில்களை உடைத்து வாளி ஒன்றிற்குள் போட்டு அதற்குள் வெறும் காலோடு இறங்கி நின்றார். ஆணிச் செருப்புத் தத்துவம் தான்.

இது நடந்து கொண்டிருந்த போதே மேடையின் வலது பக்கத்தில் இருந்து "டமால்" என்று ஒரு பெரிய வெடி வெடித்தது. மூன்று நான்கு தீபாவளி அணுகுண்டுகள் ஒன்றாக வெடித்தது போன்ற சத்தம். அரங்கம் 'கிர்ர்ர்'  என்று vibration -இல் உறுமியது. பாதி மாணவர்கள் பயந்து எழுந்து விட்டனர். விஞ்ஞானி liq. N2 இல் நனைத்து உருட்டிவிட்டிருந்த ரப்பர் பந்து தான் வெடித்தது. 
Fact : Supercooled oxygen is highly explosive, thats why it is used as the rocket fuel. ரப்பர் பந்திற்குள் இருந்த காற்று -196oC க்கு இறங்கி உறைந்து, பின் சூடாகும் போது அதில் இருந்த oxygen வெடித்திருக்கிறது. இது அவர் plan பண்ணி செய்தது தான். 

சத்தத்தில் அரண்டு முதல் வரிசை வலது கோடி சீனாக்காரி coke -ஐ துப்பிவிட்டு நான்கு வரிசை பின்னாடி தள்ளி வந்து அமர்ந்தாள். ("இதத் தான் நாங்க முன்னாடியே செய்தோம்")

விஞ்ஞானி ஒரு தவில் போன்ற drum -ஐ (இசைக் கருவியை)  எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு வாசித்தார் (தட்டினார்). சின்னதாக நடனம் (போன்ற ஒன்றை) ஆடிவிட்டு, பட்டாசு ஒன்றைக் கொளுத்தினார். அனைவரும் காதைப் பொத்திக்கொண்டனர். ஆனால் அது வெடிக்கவில்லை, பதிலாக ரோஸ் கலரில் புகை கக்கியது. அதை கையில் எடுத்து drum இன் ஒரு பக்கத்தைத் திறந்து உள்ளே போட்டு மூடிவிட்டு பேசிக்கொண்டிருந்தார். அந்த drum -ற்குள் எப்படி காற்று அதிர்கிறது என்பதை விளக்கப் போவதாகச் சொன்னார். புகை நிறைந்த drum -இன் ஒரு பக்கத்தைத் திறந்து, இன்னோரு பக்கத்தைத் தட்டினார். சில வித்தகர்கள் சிகரெட் புகையில் வளையம் விடுவது போல் ஒரு பெரிய ரோஸ் கலர் வளையம் கிளம்பி பத்து வரிசை இருக்கைகளைக் கடந்தும் அழகாக நகர்ந்து சென்றது. அதுவரை பிறந்த நாளுக்குக் கொளுத்தியது போல் மேசை மீது எரிந்துகொண்டிருந்த மேலுக்குவர்த்திகளை பத்து அடி தூரத்தில் இருந்து drum -ஐ தட்டி ரோஸ் கலர் புகை வளையத்தால் அணைத்துக் காட்டினார். கைதட்டாமல் இருக்க முடியவில்லை. 

இரண்டு கைகளிலும் இரண்டு dumb bell -களைத் தூக்கிக் கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்தார். ஒரு மாணவர் நாற்காலியை வேகமாகச் சுற்றி விட்டார். கைகளை விரித்தும் குறுக்கியும் சுழற்சி வேகத்தைக் கட்டுப்படுத்தினார். சுழற்சியின் அச்சுக் கோட்டில் (central axis) எடை கூடினால் சுழற்சி வேகம் கூடும் என்பதை விளக்கினார்.

கீழே உள்ளது போல் அவர் செய்த ஒரு wooden apparatus -இல் ஒரு கோழி முட்டையை வைத்தார். வெடுக்கென்று அந்த நீலக் கட்டையைத் தட்டினார். முட்டை நேராக கீழே விழுந்து அடுத்த குழிக்குள் உடையாமல் நின்றது. ஐந்து முறையும் உடையாமல் குழிக்குள் விழுந்து நின்றது. எடை அதிகமான கட்டை வேகமாகவும் முட்டை தாமதமாகவும் விழுந்ததால் அடுத்த குழிக்குள் முட்டை அமர்ந்தது. 100% vertical fall பற்றியும் விளக்கினார்.

1.jpg

பின் அந்த முட்டையை கையில் வைத்து vertical -லாக அழுத்தி உடைக்கும்படி சவால் விட்டார். இரண்டு மாணவர்கள் முயன்று முடியவில்லை. பின் விஞ்ஞானி அதை வாங்கி "மோதிரத்தை அணிந்துகொண்டு அழுத்தினால் உடைத்துவிடலாம்" என்று comedy -யாக அறிவியல் விளக்கினார். "இதுவரை என் மனைவியால் இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை, என்னை பலசாலி என்று நம்பிக்கொண்டிருக்கிறாள்" என்றார். 

மொத்தம் ஒன்றரை மணி நேரம் நிற்காமல் இன்னும் பல அறிவியல் ஜாலங்களை செய்துவிட்டு மீண்டும் ராக்கெட்டில் ஏறி மறைந்தார். அவருடைய மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இது போன்ற ஆசிரியர்களைத் தேட வேண்டியுள்ளது. மக்கு மாணவர்களின் மனத்தைக் கூட உழுது, விதைத்து, விவசாயம் செய்து விடுவர். 

1 comment:

  1. pakka scientist... and a great explanation by you.. superb..

    ReplyDelete