திரிச்சூரில் யானை ஒன்று திமிறிக்கொண்டு வந்தால் தெருக்கள் தெறித்துக்கொண்டு ஓடும். அதை அடக்குவதற்குள் முழு நீளப் படம் எடுத்து மூன்று நாட்கள் செய்திகளில் ஓட்டுவோம். கி.மு.327 -இல் அலெக்ஸாண்டர் இந்தியாவில் நுழைந்து பஞ்சாபின் போரஸ் மன்னனை போரில் வீழ்த்தினான். அலெக்ஸாண்டர் யானைகளை முதன் முறையாக சந்தித்ததும் தன் குதிரை Bucephalus -ஐ இழந்ததும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த போரில் தான். அடுத்த போருக்கு ஆயத்தமான படை இருபதாயிரம் குதிரை மற்றும் இருபதாயிரம் காலாற்படை வீரர்களோடு கங்கையை அடைந்தது. கங்கையின் அக்கரையில் 'நந்தா' சாம்ராஜ்யத்தின் கந்தாரா என்ற இந்திய மன்னர் இரண்டு லட்சம் காலாற்படை வீரர்கள், என்பதாயிரம் குதிரைகள், எட்டாயிரம் தேர்கள், ஆறாயிரம் யானைகளோடும் காத்திருந்தான். இந்த செய்தியை கேட்ட அலெக்ஸாண்டரின் வீரர்கள் கிழக்கு நோக்கி பயணிக்க மறுத்தனர். அலெக்ஸாண்டர் மனமுடைந்து வீடு திரும்ப சம்மதித்தான்.
ஒரு யானை நம் முன்னால் ஓடிவந்தாலே கிணற்றுக்குள் குதித்துவிடுவோம், யோசித்துப் பார்க்கிறேன் ஆறாயிரம் யானைகள் ஒன்றாக எதிரில் ஓடிவந்தால் எப்படி இருக்கும்!
இந்தியாவிற்கு மேற்கே ஆசியாவிலும் ஐரோபியாவிலும் அவ்வளவு யானைகள் இருந்ததாக தெரியவில்லை. யானைகளை முதன் முதலில் போரில் பயன்படுத்திய பெருமை இந்தியர்களையே சேரும். சரியான காலத்தை சொல்ல முடியாவிட்டாலும் கி.மு 2000 -ஆம் ஆண்டுகளைப் பற்றிய வேதத்தில் (Rigveda) இந்திரனிடம் ஐராவதம் என்ற தெய்வீக வெள்ளை யானையும் மேலும் பல யானைகளும் இருந்ததாகக் கூறப்படு கிறது. அதன் பின் தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் யானைகளின் பயன்பாடு பரவியது. அலெக்ஸாண்டரின் இந்திய வருகைக்குப் பின் அவன் மேற்கே ஓட்டிச்சென்ற யானைகள் கிரேக்கத்திலும் பயன்பட்டது. நடுவில் இருந்த அரேபிய பாலைவனங்களில் "கிழக்கே போன அலெக்ஸாண்டர் ஏதோ டைனோசர்களை கூட்டிக்கொண்டு வருகிறான்!" என்பதுபோல பார்த்திருப்பார்கள்.
நம்ம சோழர்களைப் பற்றி நெடுக்க (நீளமாக) சொல்லியாக வேண்டும். வடக்கே அலெக்ஸாண்டர் இந்தியாவை எட்டிப்பார்த்த காலகட்டத்தில்தான் அதைப் பற்றி எந்த சலனமும் இன்றி இங்கு சோழர் என்ற சமூகம் படை திரட்டி ஆட்சியைத் தொடங்கியது. கி.மு 300 -களில் தொடங்கி கி.பி 1200 வரை பதினைந்து நூற்றாண்டுகள் தென் இந்தியாவை ஆண்ட சோழ மன்னர்களை முன், இடை, பின் என்று வரையறுக்க முடியும். 15 நூற்றாண்டுகள் என்றால் எதனை தலைமுறைகள் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். சராசரியாக ஒரு மன்னன் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று வைத்தால் கிட்டத்தட்ட 50 சோழ மன்னர்கள் அடுத்தடுத்து ஆட்சியில் இருந்திருக்க வேண்டும். 15 நூற்றாண்டுகள் ஆண்டு நம் நாட்டையும், கலாச்சாரத்தையும், மொழியையும், நிலத்தையும் வளப்படுத்திய பரம்பரையை வெறும் 7 நூற்றாண்டுகளில் மறந்துவிட்டோம். பெயர் கூட ஞாபகத்திற்கு வராது. வாரிசுகள் எங்கே போயின என்பது தெரியாது. வரலாற்றை நாம் பேணிக் காப்பதன் அடையாளம் இது.
சோழ மன்னர்கள் (இவர்களுக்குள் இருந்த உறவுமுறைகள் தெளிவாகவில்லை)
கி.மு.300 - கி.பி.150 வரையிலான முற்கால சோழர்களைப் பற்றி சங்க இலக்கியம் அவ்வளவாக சொல்லவில்லை என்றாலும் இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட புனிதநூலான 'மகாவம்சம்', அலெக்ஸ்சான்ட்ரியாவை சார்ந்த வணிகன் ஒருவனால் எழுதப்பட்ட 'எரித்ரேயன் கடலின் வழிகாட்டி' (Periplus of the Erythraean Sea), புவியியலாளர் Ptolemy -யால் எழுதப்பட்ட நூல், மற்றும் சில ஜென், புத்த மத நூல்கள் தகவல்கள் தருகின்றன.
முற்கால சோழர்களில் புகழ்பெற்றவன் கரிகாலன். உலகின் முதல் அணையான கல்லணையை கட்டியவனும் வட இந்தியாவை வென்று இமயத்தில் கொடி நட்டியவனும் இவனே. களப்பிரர்களாலும் பல்லவர்களாலும் பாண்டியர்களாலும் தோற்கடிக்கப்பட்டு இடைக்கால சோ ழர்கள் புகழ் இழந்து காவிரிக் கரையில் உறையூரில் குறுநில மன்னர்களாக கி.பி. 3 - கி.பி 9 ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்தனர். பின் விஜயாலய சோழன் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் அரியணை ஏறி பிற்கால சோழ சாம்ராஜ்யத்தை தொடங்கினான். சோழ மறுமலர்ச்சியால் மற்ற அரசர்கள் இருந்த இடம் தெரியாமல் போனார்கள். ராஜ ராஜ சோழன் காலத்தில் சோழ எல்லை நான்கு திசையிலும் பரவியது. வடக்கே மைசூர், மேற்கே இலட்சத் தீவு, கிழக்கே விஜயநகர், தெற்கே இலங்கை முழுவதும் புலிக்கொடி பறந்தது. அப்போது இலங்கை 'ஈழம்' என்றே அழைக்கப்பட்டது. மீண்டும் ஈழத்தில் 'புலிக்கொடி' இனி எப்போது பறக்கும் என்று தெரியாது.
ராஜேந்திரன் காலதில் சோழ எல்லை (கி.பி. 1044)
இந்தியாவின் மற்ற ராஜ்யங்கள்
அதன் பின் வந்த ராஜேந்திரன் சோழ சாம்ராஜ்யத்தின் உச்சத்தை எட்டினான். வரை படத்தைப் பார்க்க. வடக்கே வங்காளத்தை வென்று பர்மா வழியாக, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் வரை எல்லையை பரப்பினான். பின் வந்தவர்கள் சில இடங்களை தோற்றபின் முதலாம் குலோத்துங்கன் கலிங்கத்தை (தற்போதைய ஒரிசா) வென்று சோழ நாட்டோடு சேர்த்தான். மூன்றாம் ராஜராஜன் கி.பி.1279 -இல் பாண்டியர்களிடம் தோற்றதால் சோழ சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. இவனுடைய வாரிசுக்கு என்ன ஆகிறது என்பது தான் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் புனையப்பட்ட கதை. நிற்க.
நான் சொல்லி வந்த யானைக் கதைக்கு போவோம். நான் வியப்பதெல்லாம் மேல் சோன்ன 15 நூற்றாண்டுகள் எத்தனை போர்களை உள்ளடக்கியிருக்கும்! சோழர்களின் அத்தனை போர்களிலும் யானைகள் வீற்றிருந்தன. ஆயிரக்கணக்கில் யானைக் குட்டிகளை போருக்கு பழக்கி தீனியிட்டு வளர்த்து, படையில் சேர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. தனி அமைச்சர்களின் கீழ் ஒரு துறையே இயங்கி வந்திருக்க வேண்டும். எங்கிருந்து அத்தனை யானைகளை பிடித்திருப்பார்கள்? ஆயிரக்கணக்கான யானைகளுக்கு எத்தனை பேர் பயிற்சி அளித்திருப்பார்கள்? ஒரே நேரத்தில் பத்து பேரை பந்தாட வல்ல யானை ஒரு சன்னமான குச்சிக்கும் அதைவிட சன்னமான பாகனுக்கும் கட்டுப்படுவது ஏன்? நமக்கு ஓர் அறிவு அதிகம் என்பதாலா? பழைய வினித் படம் ஒன்றில் டீக்கடையில் அமர்ந்துகொண்டு வடிவேலு "சாயங்காலம் சாயங்காலம் யானைக்கு வேற சண்டை பழக்க வேண்டியிருக்கு" என்று சடைந்து கொள்வது நினைவிற்கு வருகிறது.
ஆயிரம் யானைகளை கொன்றால் பரணி. புலவர் செயங்கொண்டார் முதலாம் குலோத்துங்க சோழன் மீது 'கலிங்கத்துப் பரணி' பாடினார். கலிங்க நாட்டின் (ஒரிசா) அனந்தவன்மன் என்ற மன்னனை கருணாகர தொண்டைமான் என்ற தளபதியின் தலைமையில் கி. பி. 1112 இல் குலோத்துங்கன் படை வென்றதுதான் கலிங்கத்துப் பரணியின் கதை. இலக்கணப் படி தோற்ற நாட்டின் அல்லது மன்னனின் பெயரில் தான் பரணி அழைக்கப் படும். கலிங்கத்தில் சென்று ஆயிரம் யானைகள் கொல்ல குலோத்துங்கன் இங்கிருந்து எத்தனை யானைகள் ஓட்டிச் சென்றிருக்க வேண்டும்? அத்தனை தொலைவிற்கு படை எப்படி நகர்ந்து சென்றிருக்கும்? ஒருவேளை இன்று கவிப்பேரரசும் வித்தககவியும் முத்தமிழறிஞரை பாடுவது போல் செயங்கொண்டார் குலோதுங்குவை பாடித் தள்ளிவிட்டாரா என்று ஐயம் எழலாம். ஆனால் அதே அரசவையில் ஒட்டக்கூத்தர் வீற்றிருந்து அதே அரசனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 'குலோதுங்க சோழ உலா' பாடினார் என்னும் போது செயங்கொண்டார் புளுகியிருக்க வாய்ப்பில்லை. கூத்தன் சிறையில் இட்டிருப்பான்.
கடற்படை பூட்டிச் சென்று, யானைகளுக்கு பெயர்போன தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவை வெல்ல வேண்டுமானால் ராஜேந்திரன் எத்தனை யானைகளை தஞ்சையில் இருந்து ஏத்திச் சென்றிருப்பான்? யானைகளிலும் வலுவுடைய வீரர்கள் இருந்திருக்க வேண்டும். 'ஜோதா அக்பர்' படத்தில் அக்பர் முரட்டு யானையோடு ஒண்டியாக மல்லுக்கட்டுவது போல் காட்சிப் படுத்தியிருப்பார்கள். நிஜத்திலும் நம் மன்னர்கள் அப்படி இருந்திக்க வாய்ப்புண்டு.
என்னோடு சதுரங்கம் ஆடுபவர்கள் என்னைக் கேட்கும் கேள்வி "ஏன் எப்பவும் யானையவே மொதல்ல எறக்குற?". மூன்று சேனைகளையேனும் சாய்த்து விட்டுத்தான் சாகும் என் யானைகள். இந்திய துணைக் கண்டத்தில் அத்தனை போர்களிலும் முண்டியடித்துக்கொண்டு முதலில் ஓடிவந்தவை யானைகளே. பத்தாயிரம் யானைகள் நிலம் அதிர ஓடிவந்தால் எதிரி என்னதான் செய்வான் பாவம். பயத்திலேயே பாதி உயிர் போய்விடும். போர் இல்லாத காலங்களில் யானைகள் விழாக்களுக்கு பயன்பட்டிருக்க வாய்ப்புண்டா என்று தெரியாது. போருக்கு பழக்கிய யானைகள் அங்கேயும் புகுந்து துவம்சம் செய்துவிடுமோ?
இத்தனை ஆண்டு ஆட்சிக்குள் எத்தனை விழாக்கள், அரசியல்கள், சமரசங்கள், துரோகங்கள், தோல்விகள், பொறுமைகள் இருந்திருக்கும். மக்களிடம் ஆதரவு திரட்டி, நிதி திரட்டி, வீட்டிற்க்கொரு வீரன் திரட்டி படை திரண்டிருக்கும். வீரர்கள் தவிர கொல்லன், தட்சன், குயவன், நெசவாளன், சிற்பி, மருத்துவன், ஜோசியன் என படை பறைகொட்டிப் பயணப்படும். மன்னன் போருக்கு போகும் காலத்தில் கலகக் காரர்கள் தலைநகரை கைப்பற்றாமல் இருக்க விசுவாசம் உள்ள தமையன் ஒருவனை தளபதியாக்கி நகரில் விட்டுச் செல்லவேண்டும். புறத்திணை புலவர்கள் படையோடும் அகத்திணை புலவர்கள் அரண்மனையிலும் இருந்திருக்கலாம். தலைவன் வரும் வரையில் தலைவி குறத்தியின் குறிகேட்டு காத்திருப்பாள். உழவன் தஞ்சையில் நெல்லடித்து உணவு சேர்த்திருப்பன். முன்னேறிப் போகும் படை கிராமங்களை கைப்பற்றி விழாக்கள் எடுத்து, பண் இசைத்துப் பாடிவிட்டு, கோவில் கட்ட சிற்பிகளை பணித்துவிட்டு, கூடாரம் கலைத்து மீண்டும் பயணப்படும். கிராம மங்கையரோடு காதல் மலர்ந்து மன்னன் தலைமையில் மணம் முடித்து, காத்திருக்கச் சொல்லி கையசைத்துவிட்டு வீரர்கள் விடைபெற்றிருப்பார்கள். எதரி மன்னன் தானும் ஒரு படை திரட்டி நேர் நின்றிருப்பான். போருக்கு முன்னிரவு சோற்றில் விஷம் வைக்க சதி நடந்திருக்கும், அது தோற்கவே கூடாரத்தில் சமரசம் நடந்திருக்கும், அதவும் தோற்ற பின் போர் மலர்ந்திருக்கும், பாதிப் போரில் எதிரி மன்னன் மகளைக் கொடுத்து மண்டியிட்டிருப்பான். அதை நம் தலைவன் ஏற்றால் மீண்டும் விழாக்கள், கோவில்கள், கையசைப்புகள், போர்கள். மன்னன் நிலங்களை வென்று பல பெரும் பொழுதுகளுக்குப் பின் வெற்றியோடு வீடு திரும்பினால் வாகை காத்திருக்கும், ஒருவேளை வீரம் காத்து வடக்கிருந்து செத்துப் போனால் பத்து வயதில் வாரிசு ஒன்று வாள் ஏந்தக் காத்திருக்கும்.
இதில் என் எள்ளுத்தாத்தன் வில்லேந்திச் சென்றிருக்கலாம், வாள் சுழற்றி சண்டையிட்டு இருக்கலாம், அல்லது ஒற்றனாகக் கிளம்பி புயல் வேகத்தில் குதிரை ஒட்டித் திரிந்திருக்கலாம். எள்ளுக்கிழவி பொன் சேர்த்து வாழாமல் அணைக்கு மண் சுமக்க போயிருக்கலாம். வாழிய தமிழ் மக்கள்.
சுவடிகளில் இருந்து ஏடுகளுக்கு மாறிய நம் வரலாறு, தகடுகளில் ஏறி திரைக்கு வந்தால் மட்டுமே நம் வாரிசுகள் அதை நம்பக்கூடும். மேற்கில் போர்க்கலங்கள் திரைப்படங்கள் ஆகிவருகின்றன. நம் மொழியில் வரலாறு மற்றும் போர்களை படமாக்க மிகச்சிலரே முன்வருகிறார்கள். அவைகளும் நிதி பற்றாக்குறையால் பாதியில் நீர்த்து விடுகின்றன. நூறு குதிரைகளை வைத்து படம் முடிக்க கமல் போன்றவர்களாலேயே முடியவில்லை. பத்தாயிரம் யானைகளுக்கு எங்கு போவது. பத்து யானைகளை பச்சை திரை முன் ஓடவிட்டு CG -இல் பத்தாயிரம் ஆக்கினால் மட்டுமே முடியும். ஒரு யானை செத்தாலே செய்தியாகும் நிலையாக அவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
சமீபத்தில் போர்க்களத்தை மிகத் தத்ரூபமாக காட்டிய படம் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகிய "Robin Hood". அவசியம் பாருங்கள்.
மற்ற சாம்ராஜிய மன்னர்கள் பற்றி மேலும் வாசிக்க வேண்டியுள்ளது. நான் வாசித்து வாய் பிளந்த வரலாற்றை மட்டுமே எழுதுகிறேன். ரசனை தூண்டுதல் மட்டுமே எனது பணி, மற்றபடி புள்ளிவிவரங்கள் என்றால் எனக்கும் ஒவ்வாமைதான்.
No comments:
Post a Comment