Sunday, July 11, 2010

நினைவுகள்

அனேகமாக அனைவருக்கும் நேர்வதுதான். நம் முந்தய கால நினைவுகளை மீட்பதற்கு ("மீட்டுவதற்கு" என்பது சாலப்பொருந்தும்) சில நேரங்களில் கருவி தேவைப்படுகிறது. இசை மீட்டுவது போல.  

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று R. G. Lakshminarayana -வின் குரலை கேட்க நேர்ந்தது. "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் உதிக்கின்ற சூரியனும் உறங்குகின்ற வேலை..." என்ற வரி முடிவதற்குள், நிகழ் காலத்தில் இருந்து கழன்று, பின்னோக்கிச் சுழன்று என் இளங்கலைப் பருவத்தில் விழுந்து நின்றேன். நான் எப்பண்பலைக்கும் விசிரியல்ல, ஆனாலும் இக்குரல் என்னை அறியாமலே என் முன்னிரவுகளை நிறைத்திருக்கிறது. இளங்கலைப் பருவத்தில் நான் தங்கியிருந்த அறை, வெள்ளி இரவுதோறும் கோவையிலிருந்து நான் ஊர்திரும்பும் இரவுப் பேருந்து, கடைசி புரோட்டாவும் தீர்ந்து நாற்காலிகளை மேசைமீது கவிழ்க்கும் உணவகக் காட்சி எனப் பல முன்னிரவுகள் என் நினைவில் பிம்பமாகி மறைகிறது. அந்தக் குரலின் வசீகரத்தைத் தாண்டி, அது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் எங்கிருந்தேனும் பின்னிசையாக ஒலித்ததே காரணம். 

சில பாடல்களும் நம்மை குறிப்பிட்ட காலத்திற்கு இழுத்துச் செல்லும். Boys, லேசா லேசா, காக்க காக்க படப் பாடல்கள் என் இளங்கலைக் காலத்தோடு பிணைந்தவை. "மன்மத ராசா" கேட்க்கும் போதெலாம் CASCAL - GRD அரங்க அதிர்வு தொற்றும். ஒலி மட்டுமல்ல வாசம், வானிலை, தோற்றம், சுவை, கையெழுத்து என்று பல கருவிகள் நம் இறந்த காலத்தைச் சிறைபிடித்து வைத்திருக்கின்றன. அவற்றைத் தொடும் போதெலாம் நினைவுகள் விரிகின்றன. 

இதை எண்ணிப்பார்த்து நான் இப்போதெல்லாம் volunteer -ஆக என் காலத்தோடு சில வாத்தியங்களைச் சேர்கிறேன். உதாரணமாக ஒவ்வொரு இடத்தில் நான் வசிக்கும்போதும் என் mobile phone ringtone -ஐ மாற்றிக்கொள்கிறேன். "Rang de basandi"  ringtone கேட்கும்போது நான் சென்னையில் வசித்த ஞாபகம் வரும். இடத்திற்கு, காலத்திற்கு தகுந்தவாறு என் கணினி திறக்கும் இசை, Desktop Background, என் perfume என்று சிலவற்றை volunteer -ஆக மாற்றுவதுண்டு. இவற்றை என்றேனும் எதிர்காலத்தில் கடக்க நேரும்போது இக்கால நினைவு தோன்றும். 

ஐவகை நிலங்களுக்கு ஏற்ப ஐவகை பண், மலர், கடவுள் என கருப்பொருள் உரிப்பொருள் கொண்டதன் அவசியம் புரிகிறது. 

தவிர்க்க நினைக்கும் சில நினைவுகளைத் தூண்டும் கருவிகளும் சேர்ந்துகொள்கின்றன. ஆளவந்தானில் நந்து காசை சுண்டினால் கடுப்பாவதைப் போல எல்லோருக்கும் சிலது வாய்த்துவிடுகின்றது. 

நீங்களும் உங்கள் time machine-கள் பற்றி எழுதலாம். 

No comments:

Post a Comment