Monday, February 28, 2011

கார் பொழுது


நீ குளித்த நீர் சேர்ந்த ஓடை

ஓடித் திரிந்து கடல் சேர்ந்து காய்ந்து

மேகமாய் மேய்ந்து பெருகி அலைந்து

நாடு கடந்து நானிருக்குந் தெருவிடை வந்து

வான் இடித்துத் தேன்மடை திறக்க

நானென்ன குடைவிரித்து அணையவா?

இமைமூடி நிமிர்ந்து உடல் சிலிர்க்க நனைகிறேன்.

மழைக் காலம்.


-ச

மெய்யெழுத்து

என் தேசத்துப் பெண்
ஒரு மெய்யெழுத்து
நெற்றி மீது என்றும் புள்ளி சுமக்கிறாள்.
வாழ்க்கை ஒரு இலக்கணப் பிழை
இங்கு ஒரு உயிர் நீங்கினால்
அவள் உயிர்மெய் ஆகிறாள்.

அமராவதி

வரண்டுகிடக்கும் எம் அமராவதி ஆற்றின் நடுவே
உழவன் 
பறித்த ஊற்றோன்றில்
தூண்டில் போட்டுக் காத்திருக்கிறான் எம் சிறுவன்

கரைகள் விழுங்கிய காலமெல்லாம்
கதைகளாகிப் போனது
வெள்ளம் பாய்ந்த காலங்கள்
அன்றே மாய்ந்தது
ஓடையாய் சுருங்கி ஓடிய காலமும்
கானலாய் காய்ந்து போனது

நாரைகள் எல்லாம் போகிறபோக்கில்
குனிந்துபார்க்கும் 'குட்டை'யான காலம்கூட
மணல் அள்ளியபோது
மாட்டுவண்டி ஏறிப் போனது.

எம் ஆற்றின் தொண்டைக்குழியில்
ஆழ்துளை அமைத்துக்
குடிநீர் உறிஞ்சும் காலம் இது.

ஊரார் துணிகளை எல்லாம் வெளுத்த
பாறைகள் உறங்கிக் கிடக்க
எம் மக்களின் கோரைப் புல் கொல்லையில்
கழுவக்கூடத் தண்ணி இல்லை.

ஆற்றங்கரை கோயில் முனிகளெல்லாம்
தாகம் தீர்க்க
தேங்காய் தண்ணி பார்த்துக் கிடக்க
உழவன் மக்கள்
வட்டிக்கடை போகும் வழியில்
ஒருமுறை
வற்றிப்போன கிணற்றை எட்டிப்பார்க்க நேரும்.

குத்தவைத்துக் காத்திருக்கும் எம் சிறுவன்
நம்பிக்கை இழந்து
சங்கு பொறுக்கித் திரும்பும் முன்
அவன் தூண்டிலில் சிக்கி
மேலே வரட்டும்
செத்துப் புதைந்த எம் நதி.

நான் விடைபெற்றுக் கிளம்பிய பொழுது

இரவில் உறங்கும் குளத்தில்
ஒரு பூவின் இதழ் விழுந்து
நிலவின் தெளிந்த பிம்பத்தைக்  
கலைத்துச் சேர்ப்பது போல்

உள்ளங்கைகள் உரசிய கணத்தில்

கலைந்து சேர்ந்திருக்கும் நமது ரேகைகள்
அநேகமாய் உனது எனதாகவும்
எனது உனதாகவும் மாறிப்பதிந்திருக்கும்

இமைத்தல் நிறுத்தி விழிகள் நான்கும்
இணைந்து மீண்ட ஓர் உபகணத்தில்
மெல்லிசை யொன்று மிதந்து
வானமெங்கும் பரவியிருக்கும்

நான் விடைபெற்றுக் கிளம்பிய பொழுதில்
என்னோடு சேர்ந்து உன் கனாக்களும்
பறந்து வானத்தில் மறைந்திருக்கும்
வினாக்கள் உன்னோடு வீடு சேர்ந்திருக்கும்

விளக்கணைத்து வீடுறங்க, ஊருறங்க,

ஊருடன் சேர்ந்து யாவும் உறங்க
மல்லிகையும் மலர்ந்து ஓய்ந்த அந்நள்ளிரவில்  
வாசற்படியில் வான்வெளியில் வெண்ணிலவில்
என் நினைவு தோன்றுமோ(டி)?

காத்திருக்கும் தருணங்களில் கடிகாரத்தில் இருந்து
எத்தனை நொடிகள் தெறித்து மாய்ந்திருக்கும்!
நான் இன்றி எத்தனை தினங்கள்
மேற்கே சாய்ந்திருக்கும்!

நீ தொடுவதில் உயிர்ப்பதெல்லாம் நான்!
மல்லிகை சூடினால் மணப்பதும் நான்!
மாடத்தில் நின்று வானத்தைப் பார்த்தால்
விரிவதெல்லாம் என் வரிகளே

அடை மழைக் காலங்களில்
உன் நெடும் பயணம் யாவிலும்
ஜன்னல் கம்பியில் வடியும் துளியிலும்
உடன் இருப்பேன்

என் நினைவில் உருகி நடக்கையில்
ஓர் அலைவந்து உன் பாதச் சுவடு வாசித்துப் போகும்
அதை வாங்கிக் கடல் முழுதும்
கவிதை பாடிக் காதல் செய்யும் மீன்கள்

தீர்த்தக் கரை வற்றி தெற்கு மூலை தேய்ந்து

செண்பகத்தோட்டம் காய்ந்திருக்கும்
என்றபோதும் காத்திருந்து ஓய்ந்துவிடப் போவதில்லை
வெண்ணிலாவில் ஏறி
வந்திறங்கு பார்த்திருப்பேன்.

Sunday, February 27, 2011

குறுஞ்செய்தி

ஆழ்ந்த பொருள் ஏதும் இல்லாதபோதும் நேரத்தோடு பொருந்திப் போகும் குறுஞ்செய்தி சட்டென  மனம் கவரும். அப்படி வெவ்வேறு காலங்களில் நான் அனுப்பிய situation குறுஞ் செய்திகளையும், கிடைத்தவற்றில் எல்லாம் கிறுக்கிய வரிகளையும் சேர்த்து வைத்து இன்று வாசித்துக் காட்டியவளுக்கு நன்றி. அதில் சிலவற்றை கீழே பதிந்துளேன்.
இத்தனை காலமாய்
பா ஆயிரம் பாடி வைத்தும்
பண் ஆயிரம் மீட்டி வைத்தும்
எண்ணாயிரம் கவிஞர்கள் சேர்ந்து
விண்ணுயர ஏற்றி வைத்தும்
நுனுயிர் காலந்  தொட்டே
எவ்வுயிருஞ் செய்து வருங் காதலை

நுனியளவும் விளக்க வாய்க்கவில்லை

2007

கூச்சம் ஏதுமின்றி எல்லோர் முன்பும்
மேகம் வந்து மேனி முகர்ந்து
பூமிக்குக் கொடுக்கும் முத்தம்
மழை நின்ற பின்பும் தரை முழுதும்
இதழ் பதித்த சாயம்

2008

எங்கள் கிராமத்துச் சாலைகளில் பயணிக்கும் போது
சிறுவர்களைப் போல தூரத்தில் இருந்து
கையசைத்துக் கொண்டிருந்தன காற்றாடிகள்
விளை நிலங்களும் அதனிடம் விடை பெற்றுக்கொண்டன

2007

வாடை வந்து பூக்கள் பறிக்கும்
கோடை ஒருநாள் இலைகள் உதிர்க்கும்
பூதக் காற்று வீசினால்
பாதம் காட்டிச் சாகும் மரங்கள்
என்றாலும் காற்று அதன் உயிர்

2006

நனைந்த ஒரு பிற்பகலின்
அழகை ரசித்து கைகோர்த்து நடப்போம்
நமக்காகவே இந்த உலகத்தில் மலரும்
மழைக் காலம்

நெடும் பாதையில் தொடுவானம் வரை மழை
அந்த நெடுங் கவிதையில் ஒரு புள்ளியாய் நம் குடை
பொழியும் கோடித் துளிகளில் ஒரு துளி
குடைக்குள் உயிரோடு உன்னுடன்
ஒரு நதி என்னுடன்

மேகம் சூழ் கொண்டு மின்னல் வாள்கொண்டு
நம்மைக் களவாட
நீலத்திரை கிழித்து நீந்திச் சென்று
ஒரு யுகத்திற்கான தனிமை வாங்கி வருவோம்

2006

எப்போதும் அடைத்துவிட்டுத் திரும்பியதும் குழாயில்
ஒட்டியிருக்கும் தண்ணீர் துளி சொட்டுவது போல
கை அசைத்துவிட்டுப் போனாலும்
சற்று தூரத்தில் திரும்பி ஒரு புன்னகை

2007

விதைகள் என்றும் நிலங்கள் பார்த்து விழுவதில்லை
சேற்றில் இட்டு புதைத்தாலும் மூச்சுத்திணறி சாவதில்லை
காற்றடித்துப் பறந்தபோதும் காக்கை கவ்வி விழுங்கிய போதும்
பாதி வழியில் அதன் பயணம் முடிவதில்லை

2009

நெஞ்சு உயர்த்திச் சொல் நீ வேங்கை என்று
உன் உயிர் இன்று விதைக்கப் படும்
நாளை ஈழம் என்றொரு தேசம் முளைக்கும்
காலை வரை கண்ணுறங்கு

இலங்கை தேசத்தை யார் வரைந்தாலும்
அது நம் கண்ணீர் துளி வடிவில் காட்சி தரும்
பற்றி எரி என் கண்ணே
இனி தீப்பொறியாய் அது தெரியட்டும்

விடியும் வரை வானம் பார்த்துக் கிடக்க
நீ முடவனல்ல
உன் தந்தையும் தாயும்
போரிட்டு மாய்ந்தது மெய்யெனில்
புறப்படு பூமி நெம்பிப் புரட்டிப்போட

வடியும் ரத்தத்தில் நூறு புலிகள் பிறக்கும்
வலிகள் ஒன்றும் புதிதில்லை இது உனது தருணம்
வீழ்ந்தால் வீர மரணம் பாய்ந்து வா

ஓடிப் பிழைக்கும் நேரத்தில்
மோதி வெற்றி பெறலாம்
உன் கைகள் இரண்டிலும் பத்து ஆயுதம்
போர்க்களம் உனது நிலம்
அதை போரிட்டு எடு

உந்தன் உறவு, உடைமை, வீடு
எவற்றிலும் உனக்கு உரிமை இல்லை என்று
உதைத்துத் தள்ளும்போது உரக்கச் சொல்லு
"அது உனதும் இல்லை" என்று

உன் தங்கை, அக்காள், தோழி உடைகள் கலைய
இனி ஒரு கை நீளுமாயின்
நூறு குண்டுகள் அவன் உடல் துளைக்கட்டும்
ஈழம் ஒன்றே இலக்கு
கேடயம் எறிந்துவிட்டு ஆயுதம் எடு

செத்துப் போனவள் உன்னை தூங்கிக் கிடக்கவா பெற்றாள்?
மார்பில் பாலை மட்டுமா கொடுத்தாள்?
போரிட்டுச் சாவதற்கே பிறந்துவிட்டாய்
எழுந்துவா விடுதலை ஒன்றே விடை

காலை வரை கண்ணுறங்கு என் கண்மணியே
"நாளை" உனக்கு வேண்டுமென்றால்
நகங்கள் வளர்த்துப் போரிடு
கண்ணிவெடி புதைக்க நான் போகவேணும்
என் கண்மணியே சீக்கிரமாய் கண்ணுறங்கு