Tuesday, March 18, 2014

நாட்டுப்புறப் பாடல் 

வழக்கத்தில் இருந்த இடம் : சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்

சேகரித்தவர்: S.M. கார்க்கி

பெண் பாடுதல்:

"நறுக்குச் சவரம் செய்து
நடுத் தெருவே போறவரே
குறுக்குச் சவளுறது
கூப்பிட்டது கேட்கலையோ?
சந்தனவாழ் மரமே
சாதிப்பிலா மரமே
கொழுந்தில்லா வாழ் மரமே
கூட இருக்கத் தேடுதனே

உருகுதனே உருகுதனே
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
கண்டிட்டு உருகுதனே
நிண்ணு சொல்ல மாட்டாம
நில்லுங்க ராஜாவே
நிறுத்துங்க கால் நடய
சொல்லுங்க ராஜாவே
சோலைக்கிளி வாய்திறந்து

வடக்கிருந்து வந்தவரே
வருச நாட்டுப் பாண்டியரே
தொட்டிட்டு விட்டியானா
துன்பங்களும் நேர்ந்திடுமே
தேனும் தினைமாவும்
தெக்குத் தோப்பு மாம்பழமும்
திரட்டிக் கொடுத்திட்டில்ல
தேத்துதாரே எம் மனசை

கோடாலிக் கொண்டைக்காரா
குளத்தூருக் காவல்காரா
வில்லு முறுவல் காரா
நில்லு நானும் கூடவாரேன்
துத்தி இலை புடுங்கி
துட்டுப் போல் பொட்டுமிட்டு
ஆயிலிக் கம்பெடுத்து
ஆளெழுப்ப வாரதெப்போ?"

Thursday, February 27, 2014

தமிழுரை - அறிவுமதி, எழிலுரை - டிராட்ஸ்கி மருது

#தங்கத்தமிழ் , #Arivumathi , Trotsky Marudhu , Vikatan EMagazine

தமிழுரை - அறிவுமதி, எழிலுரை - டிராட்ஸ்கி மருது

"கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்"

(குறிஞ்சி - தலைவி கூற்று)
- கபிலர், குறுந்தொகை 38

காட்டுமயில் கற்பாறைகளில் இட்டுவைத்த
முட்டையொன்றை
வெயில்குளிக்கும்
கருங்குரங்குக்குட்டியொன்று
உருட்டிக்கொண்டிருக்கிறது.

குறுந்தொகையின் இந்த இரண்டு வரிகளுக்கு
இவ்வளவுதான் பொருளா?

இல்லைங்க.

இதற்குள் இருக்கும் பழந்தமிழர்தம் பல்லுயிர் சார்ந்த
அறிவியல் மூளையின் ஆற்றலை அறிந்தால்
அசந்துபோவீங்க.

ஆமாங்க.

இந்த முட்டையை இட்ட தாய் மயில்
என்ன ஆனது... தெரியல.
எங்கே போனது... புரியல.

தனித்துக்கெடக்குது
அந்த மயில் முட்டை.

தவித்துப்போகிறான் புலவன்.
வாழவந்த புலவன்தான். ஆனாலும் வாழ்ந்து கண்ட புலவன்.
அதனை அழகா எடுத்து ஒரு சிறிய குரங்குக்குட்டியோட
கையில் கொடுக்கிறான்.

அய்யோ... அய்யோ... அறிவுள்ள யாராவது... அத
அந்தக் குரங்குக்குட்டிகிட்டபோயி கொடுப்பாங்களா?

அது ஒடச்சிடுமே... அது ஒடச்சிடுமே!

நீங்க பயப்படுவீங்க.
ஏன்னா, நீங்க நாட்டுல வாழுறவங்க.
பயணங்கள்ல
ஊர்திகளை நிறுத்தி நிறுத்தித் தின்பண்டங்களைக் கொடுத்து
குரங்குகளைப் பிச்சைக்காரர்களா மாத்தினவங்கதானே.
ஏன்... அந்தமானில் வாழும்
பழங்குடி மக்களையும் அப்படித்தானே!

ஆனா... அந்தக் கபிலக் கிழவன் பயப்படலிங்க
அவனுக்குத்தான் காடு தெரியுமே; மலை தெரியுமே.
அவன் நம்மப்போல மனிதர்களுக்கான உலகத்துல
வாழப் பழகலயே.
உயிர்களுக்கான உலகத்துல வாழ்ந்த தமிழர்களோட அல்லவா
வாழப் பழகியிருக்கான்.

அதனாலதாங்க
அது கையில துணிச்சலாத்
தூக்கிக் கொடுத்துட்டான்.

அது என்ன செய்யுது?
மாலை வெப்பம் ஊறிய வழுவழுப்பான
பாறையில
ஒரே சீரா... அந்த மயில் முட்டைய
அது உருட்டிக்கிட்டிருக்கு.

அப்படின்னா...

ஒரு முட்டை குஞ்சு பொரிக்க... அதுக்கு என்னங்க வேணும்?
தாய் அந்த முட்டையின் மீது அமர்ந்து
அதன் அடிவயிற்றுச் சூட்டைத் தரவேணும்.
அதுதான் அந்த முட்டைக்குக் கிடைக்க வாய்ப்பில்லையே.

அப்படின்னா... அது குஞ்சு பொரிப்பதற்கான
சூடு?

அதாங்க... அந்தப் பாறையோட வெப்பச் சூட்டுல
அந்தக் குட்டி உருட்டுதுல்ல.
அந்தப் பாறை வெப்பத்தையே தாயின் அடிவயிற்றுச் சூடா
வாங்கி... வாங்கி...
அந்த முட்டை குஞ்சு பொரிக்குங்கிற
அறிவியல்நுட்பத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய
அந்த மூளை... எவ்வளவு எளிமையாச் சிந்திச்சிருக்கு பாருங்க!

ஆ. விகடன்
05-Feb-2014

Saturday, February 15, 2014

- கபிலர், குறுந்தொகை - 361

#தங்கத்தமிழ் , #Arivumathi , Trotsky MarudhuVikatan EMagazine

- கபிலர், குறுந்தொகை - 361

"............... அவர்மலை
மாலைப் பெய்த மணங்கமழ் உந்தியொடு
காலை வந்த காந்தள் முழுமுதல்
மெல்லிலை குழைய முயங்கலும்
இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே"

(குறிஞ்சித் திணை - தலைவி கூற்று)

---

இவளது 'காதல்காரன்’ கொஞ்சம் தூரத்திலிருக்கிறான்.

எவ்வளவு தூரத்திலா..?

நேற்று மாலை அவனது மலையில் பெய்த மழை
இன்று காலை இவளது ஊரின் வழியே
வெள்ளமாய் வந்து கடந்து போகும்
தூரத்தில்.

அந்த வெள்ளம் பார்க்கத்தான்
வந்தாள் இவள்.

அவ்வப்போது வந்து வந்து உயிர் நசுங்க நசுங்க
அணைத்துப்போன அந்த வால் பயலின் நினைவு
உணர்ச்சி வெள்ளமாய்ப் பெருகி
இவளை
உடைக்க முயன்ற நொடியில்...

அதோ...
அந்த வெள்ளத்தில்
அவன் மிதந்து வருவதைப்
பார்த்துவிட்டாள்.

விடுவாளா?

ஓடிப்போய்... இழுத்துப்போகும் வெள்ளத்திடமிருந்து
அவனைப் பிடுங்கிக் கொண்டுவந்து
இறுகத் தழுவித் தழுவித் தழுவி
முத்தமிட்டு முத்தமிட்டு
மூர்ச்சையுறும் நேரத்தில்

உற்றுப் பார்த்தாள். பார்த்தால்...
அவனா... அவனா அது... இல்லை... இல்லை.
வேரோடும் பூவோடும்
வெள்ளம் பிடுங்கிவந்த அவனது மலையின்
ஒரு காந்தள் செடி!

அவனாய்... அதை
அவள் தழுவிய தழுவலில்...
அவனது ஆடைகளின் கசங்கல்களாய்
அதன் மெல்லிய இலைகள்
குழைந்துவிட்டன.

அதன் பிறகும்... அவனையே
வீட்டிற்கும் அழைத்து வருவதாய்
அந்தக் கார்த்திகைச் செடியை
துணிச்சலாய் அவள்
எடுத்து வந்தாள்.

அதன் கிழங்கை
அம்மா பார்க்கப் பார்க்கவே
வீட்டின் முன்
நட்டுவைத்தாள்.

அந்தக் கிழங்கு... தலைவனின் நம்பிக்கையாய்
முட்டிமோதி முளைத்துச்
செடியாகும்.

செடி
அரும்பு வைத்துப்
பூக்கும்.

அம்மா... அந்தப் பூவை வெறும்
காந்தள் பூவாகத்தான்
பார்ப்பாள்

இந்தக் காதல்காரியோ... அந்தப் பூவை
காதலனின் முகமாய்ப்
பார்ப்பாள்.

பார்க்கட்டுமே!

தமிழுரை - அறிவுமதி
எழிலுரை - டிராட்ஸ்கி மருது.

Feb 14, 2014

காட்டாறு போல் பாயும் இந்தக் காதல் 

கால் நனைத்து யாரும் மீண்டதில்லை 


கரை தாவி எவனும் கடந்ததும் இல்லை 

இதன் பாதை மறிக்க 


எந்தப் பரமனும் இல்லை 


காலம் தோன்றும்-மாயும் 


காதல் கரைபுரண்டே பாயும்
-ச

மழை

ஊர் தூங்கிப் போனாலும்

தூங்காமல் பெய்யும் மழை

போதும் என்ற போதும்

போகாமல் நையும் மழை


- ச

Friday, June 14, 2013

புறநானூறு 189

புறநானூறு 189
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

தெளிந்த கடல் நீர் சூழ்த்த நிலம் அனைத்தையும் பொது நலன் இன்றி ஒற்றை வெண்குடையின் கீழ் ஆட்சி செய்யும் பெரிய மன்னனும், நள்ளிரவும் பகலும் தூங்காமல் காட்டில் மாக்களை காவல் செய்யும் கல்லாத பாமரனும், உண்ணும் உணவு நாழி (a measure of volume) அளவே, உடுத்தும் ஆடையும் இரண்டே, என எல்லாம் ஒரே அளவுதான்.  எனவே ஈட்டிய பொருளை பிறருக்கு கொடுக்காமல் தாமே அனுபவிக்க நினைத்தால் அதனால் வரும் துன்பங்கள் பலவே.  

"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பாக்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தம்புந பலவே"

Monday, February 28, 2011

கார் பொழுது


நீ குளித்த நீர் சேர்ந்த ஓடை

ஓடித் திரிந்து கடல் சேர்ந்து காய்ந்து

மேகமாய் மேய்ந்து பெருகி அலைந்து

நாடு கடந்து நானிருக்குந் தெருவிடை வந்து

வான் இடித்துத் தேன்மடை திறக்க

நானென்ன குடைவிரித்து அணையவா?

இமைமூடி நிமிர்ந்து உடல் சிலிர்க்க நனைகிறேன்.

மழைக் காலம்.


-ச

மெய்யெழுத்து

என் தேசத்துப் பெண்
ஒரு மெய்யெழுத்து
நெற்றி மீது என்றும் புள்ளி சுமக்கிறாள்.
வாழ்க்கை ஒரு இலக்கணப் பிழை
இங்கு ஒரு உயிர் நீங்கினால்
அவள் உயிர்மெய் ஆகிறாள்.

அமராவதி

வரண்டுகிடக்கும் எம் அமராவதி ஆற்றின் நடுவே
உழவன் 
பறித்த ஊற்றோன்றில்
தூண்டில் போட்டுக் காத்திருக்கிறான் எம் சிறுவன்

கரைகள் விழுங்கிய காலமெல்லாம்
கதைகளாகிப் போனது
வெள்ளம் பாய்ந்த காலங்கள்
அன்றே மாய்ந்தது
ஓடையாய் சுருங்கி ஓடிய காலமும்
கானலாய் காய்ந்து போனது

நாரைகள் எல்லாம் போகிறபோக்கில்
குனிந்துபார்க்கும் 'குட்டை'யான காலம்கூட
மணல் அள்ளியபோது
மாட்டுவண்டி ஏறிப் போனது.

எம் ஆற்றின் தொண்டைக்குழியில்
ஆழ்துளை அமைத்துக்
குடிநீர் உறிஞ்சும் காலம் இது.

ஊரார் துணிகளை எல்லாம் வெளுத்த
பாறைகள் உறங்கிக் கிடக்க
எம் மக்களின் கோரைப் புல் கொல்லையில்
கழுவக்கூடத் தண்ணி இல்லை.

ஆற்றங்கரை கோயில் முனிகளெல்லாம்
தாகம் தீர்க்க
தேங்காய் தண்ணி பார்த்துக் கிடக்க
உழவன் மக்கள்
வட்டிக்கடை போகும் வழியில்
ஒருமுறை
வற்றிப்போன கிணற்றை எட்டிப்பார்க்க நேரும்.

குத்தவைத்துக் காத்திருக்கும் எம் சிறுவன்
நம்பிக்கை இழந்து
சங்கு பொறுக்கித் திரும்பும் முன்
அவன் தூண்டிலில் சிக்கி
மேலே வரட்டும்
செத்துப் புதைந்த எம் நதி.

நான் விடைபெற்றுக் கிளம்பிய பொழுது

இரவில் உறங்கும் குளத்தில்
ஒரு பூவின் இதழ் விழுந்து
நிலவின் தெளிந்த பிம்பத்தைக்  
கலைத்துச் சேர்ப்பது போல்

உள்ளங்கைகள் உரசிய கணத்தில்

கலைந்து சேர்ந்திருக்கும் நமது ரேகைகள்
அநேகமாய் உனது எனதாகவும்
எனது உனதாகவும் மாறிப்பதிந்திருக்கும்

இமைத்தல் நிறுத்தி விழிகள் நான்கும்
இணைந்து மீண்ட ஓர் உபகணத்தில்
மெல்லிசை யொன்று மிதந்து
வானமெங்கும் பரவியிருக்கும்

நான் விடைபெற்றுக் கிளம்பிய பொழுதில்
என்னோடு சேர்ந்து உன் கனாக்களும்
பறந்து வானத்தில் மறைந்திருக்கும்
வினாக்கள் உன்னோடு வீடு சேர்ந்திருக்கும்

விளக்கணைத்து வீடுறங்க, ஊருறங்க,

ஊருடன் சேர்ந்து யாவும் உறங்க
மல்லிகையும் மலர்ந்து ஓய்ந்த அந்நள்ளிரவில்  
வாசற்படியில் வான்வெளியில் வெண்ணிலவில்
என் நினைவு தோன்றுமோ(டி)?

காத்திருக்கும் தருணங்களில் கடிகாரத்தில் இருந்து
எத்தனை நொடிகள் தெறித்து மாய்ந்திருக்கும்!
நான் இன்றி எத்தனை தினங்கள்
மேற்கே சாய்ந்திருக்கும்!

நீ தொடுவதில் உயிர்ப்பதெல்லாம் நான்!
மல்லிகை சூடினால் மணப்பதும் நான்!
மாடத்தில் நின்று வானத்தைப் பார்த்தால்
விரிவதெல்லாம் என் வரிகளே

அடை மழைக் காலங்களில்
உன் நெடும் பயணம் யாவிலும்
ஜன்னல் கம்பியில் வடியும் துளியிலும்
உடன் இருப்பேன்

என் நினைவில் உருகி நடக்கையில்
ஓர் அலைவந்து உன் பாதச் சுவடு வாசித்துப் போகும்
அதை வாங்கிக் கடல் முழுதும்
கவிதை பாடிக் காதல் செய்யும் மீன்கள்

தீர்த்தக் கரை வற்றி தெற்கு மூலை தேய்ந்து

செண்பகத்தோட்டம் காய்ந்திருக்கும்
என்றபோதும் காத்திருந்து ஓய்ந்துவிடப் போவதில்லை
வெண்ணிலாவில் ஏறி
வந்திறங்கு பார்த்திருப்பேன்.

Sunday, February 27, 2011

குறுஞ்செய்தி

ஆழ்ந்த பொருள் ஏதும் இல்லாதபோதும் நேரத்தோடு பொருந்திப் போகும் குறுஞ்செய்தி சட்டென  மனம் கவரும். அப்படி வெவ்வேறு காலங்களில் நான் அனுப்பிய situation குறுஞ் செய்திகளையும், கிடைத்தவற்றில் எல்லாம் கிறுக்கிய வரிகளையும் சேர்த்து வைத்து இன்று வாசித்துக் காட்டியவளுக்கு நன்றி. அதில் சிலவற்றை கீழே பதிந்துளேன்.
இத்தனை காலமாய்
பா ஆயிரம் பாடி வைத்தும்
பண் ஆயிரம் மீட்டி வைத்தும்
எண்ணாயிரம் கவிஞர்கள் சேர்ந்து
விண்ணுயர ஏற்றி வைத்தும்
நுனுயிர் காலந்  தொட்டே
எவ்வுயிருஞ் செய்து வருங் காதலை

நுனியளவும் விளக்க வாய்க்கவில்லை

2007

கூச்சம் ஏதுமின்றி எல்லோர் முன்பும்
மேகம் வந்து மேனி முகர்ந்து
பூமிக்குக் கொடுக்கும் முத்தம்
மழை நின்ற பின்பும் தரை முழுதும்
இதழ் பதித்த சாயம்

2008

எங்கள் கிராமத்துச் சாலைகளில் பயணிக்கும் போது
சிறுவர்களைப் போல தூரத்தில் இருந்து
கையசைத்துக் கொண்டிருந்தன காற்றாடிகள்
விளை நிலங்களும் அதனிடம் விடை பெற்றுக்கொண்டன

2007

வாடை வந்து பூக்கள் பறிக்கும்
கோடை ஒருநாள் இலைகள் உதிர்க்கும்
பூதக் காற்று வீசினால்
பாதம் காட்டிச் சாகும் மரங்கள்
என்றாலும் காற்று அதன் உயிர்

2006

நனைந்த ஒரு பிற்பகலின்
அழகை ரசித்து கைகோர்த்து நடப்போம்
நமக்காகவே இந்த உலகத்தில் மலரும்
மழைக் காலம்

நெடும் பாதையில் தொடுவானம் வரை மழை
அந்த நெடுங் கவிதையில் ஒரு புள்ளியாய் நம் குடை
பொழியும் கோடித் துளிகளில் ஒரு துளி
குடைக்குள் உயிரோடு உன்னுடன்
ஒரு நதி என்னுடன்

மேகம் சூழ் கொண்டு மின்னல் வாள்கொண்டு
நம்மைக் களவாட
நீலத்திரை கிழித்து நீந்திச் சென்று
ஒரு யுகத்திற்கான தனிமை வாங்கி வருவோம்

2006

எப்போதும் அடைத்துவிட்டுத் திரும்பியதும் குழாயில்
ஒட்டியிருக்கும் தண்ணீர் துளி சொட்டுவது போல
கை அசைத்துவிட்டுப் போனாலும்
சற்று தூரத்தில் திரும்பி ஒரு புன்னகை

2007

விதைகள் என்றும் நிலங்கள் பார்த்து விழுவதில்லை
சேற்றில் இட்டு புதைத்தாலும் மூச்சுத்திணறி சாவதில்லை
காற்றடித்துப் பறந்தபோதும் காக்கை கவ்வி விழுங்கிய போதும்
பாதி வழியில் அதன் பயணம் முடிவதில்லை

2009

நெஞ்சு உயர்த்திச் சொல் நீ வேங்கை என்று
உன் உயிர் இன்று விதைக்கப் படும்
நாளை ஈழம் என்றொரு தேசம் முளைக்கும்
காலை வரை கண்ணுறங்கு

இலங்கை தேசத்தை யார் வரைந்தாலும்
அது நம் கண்ணீர் துளி வடிவில் காட்சி தரும்
பற்றி எரி என் கண்ணே
இனி தீப்பொறியாய் அது தெரியட்டும்

விடியும் வரை வானம் பார்த்துக் கிடக்க
நீ முடவனல்ல
உன் தந்தையும் தாயும்
போரிட்டு மாய்ந்தது மெய்யெனில்
புறப்படு பூமி நெம்பிப் புரட்டிப்போட

வடியும் ரத்தத்தில் நூறு புலிகள் பிறக்கும்
வலிகள் ஒன்றும் புதிதில்லை இது உனது தருணம்
வீழ்ந்தால் வீர மரணம் பாய்ந்து வா

ஓடிப் பிழைக்கும் நேரத்தில்
மோதி வெற்றி பெறலாம்
உன் கைகள் இரண்டிலும் பத்து ஆயுதம்
போர்க்களம் உனது நிலம்
அதை போரிட்டு எடு

உந்தன் உறவு, உடைமை, வீடு
எவற்றிலும் உனக்கு உரிமை இல்லை என்று
உதைத்துத் தள்ளும்போது உரக்கச் சொல்லு
"அது உனதும் இல்லை" என்று

உன் தங்கை, அக்காள், தோழி உடைகள் கலைய
இனி ஒரு கை நீளுமாயின்
நூறு குண்டுகள் அவன் உடல் துளைக்கட்டும்
ஈழம் ஒன்றே இலக்கு
கேடயம் எறிந்துவிட்டு ஆயுதம் எடு

செத்துப் போனவள் உன்னை தூங்கிக் கிடக்கவா பெற்றாள்?
மார்பில் பாலை மட்டுமா கொடுத்தாள்?
போரிட்டுச் சாவதற்கே பிறந்துவிட்டாய்
எழுந்துவா விடுதலை ஒன்றே விடை

காலை வரை கண்ணுறங்கு என் கண்மணியே
"நாளை" உனக்கு வேண்டுமென்றால்
நகங்கள் வளர்த்துப் போரிடு
கண்ணிவெடி புதைக்க நான் போகவேணும்
என் கண்மணியே சீக்கிரமாய் கண்ணுறங்கு

Wednesday, December 22, 2010

முடியல - 2


கடந்த ஜூலை மாதம், இயற்கை உணவுகளை மட்டும் இனி சாப்பிடவேண்டும் என யோசித்து முடிவெடுத்தேன். ரொம்ப வெயில் அடித்தால் இப்படி ஏதாவது தோன்றும். ஞாயிறு நன்மதியம் 1 மணிக்கு 105 F வெப்பத்தில் சைக்கிளில் கிளம்பினேன். முன்னதாக இணையதளத்தில் தேடி "The Earth - Natural Food Store" -இன் முகவரியையும், Google Maps -இல் வழியையும் பார்த்து வைத்திருந்தேன். 309 South Flood Street -ஐ அடைய 5 km அழுத்த வேண்டும்.

மொட்டை வெயிலில் சட்டை நனைய அழுத்தியதில் பழைய நினைவுகள் எல்லாம் தோன்றியது. போன ஜென்ம ஞாபகம் வரவில்லை என்றாலும், வெயிலோடு விளையாடிய பால்ய வயது காட்சிகள் நான் போகும் பாதை எங்கும் படர்ந்தன. "ஆட்டோகிராப்" படத்தில் வருவது போல் என் சைகிள் டயருக்கு முன்னால் உள்ள காட்சிகள் கிராபிக்சில் கரிசல் காடுகளாய் மாறின. கோடை காலங்களில் ஓடித்திரிந்த பொழுதுகள், வேப்ப மரத்தின் வாசம், சுள்ளி பொறுக்கி சும்மாடு வைத்துச் சுமக்கும் கிழவி, முக்காடு போட்டு எருமை மேய்க்கும் வடுகன், புதுப்பை கைகாட்டியில் இருந்த பூவரச மரத்து நிழல், நொங்கு வண்டி என கோடைப் பெரும்போழுதின் கருப்பொருள், உரிப்பொருள் ஊடாகப் பயணித்து நான் சேரவேண்டிய "The Earth - Natural Food Store" அருகில் வந்து சேர்த்தேன்.

கடையின் முன்பு இருந்த பசுமையான மரம் பெயர்ப்பலகையை மறைத்திருந்ததால் அடையாளம் தெரியாமல் சுற்றி இருந்த வீதிகள் அனைத்திலும் தேடினேன். யாரிடமாவது கேட்கலாம் என்றால் கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை தெருவில் யாரையும் காணாம். அது வழக்கமானது தான், Norman பெரிய city அல்ல. வீடுகளும் மரங்களும் நிறைந்த சிறிய நகரம். எல்லா வீடுகளும் பூட்டியே இருக்கும். கதவை தட்டினாலும் சங்கிலிக்கு பின்னல் இருந்துதான் எட்டிப் பார்ப்பார்கள். கொளுத்தும் வெயிலில், வெறித்த தெருக்களில், பூட்டிய வீடுகளுக்கு நடுவில் ஒற்றையாய் நின்ற அனுபவம் நிறைய உண்டு. எங்கள் சொந்த ஊரை சுற்றிய கிராமங்களுக்கு வருடந்தோறும் மே மாதங்களில் எங்கள் பள்ளி விளம்பரத்துக்காக சென்றதுண்டு. பெரும்பாலும் வீடுகள் பூட்டியே இருக்கும், கதவுகளில் நோட்டீஸ் சொருகிவிட்டு வருவோம்.

கடைக்கு நேர் எதிரில் இருந்த ஒரு வீட்டிலிருந்து மூன்று வயது குழந்தை வெளியே வந்தது. சிவப்பாகத்தான் இருந்தது ஆனால் மூன்றாம் தலைமுறை முன்னோர்கள் ஆபிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்த சாயல் தெரிந்தது. அதன் பெற்றோர்கள் பிக்னிக் செல்வதற்கான பொருட்களோடு வெளியே வந்தார்கள். அவற்றை காரில் ஏற்றிக்கொண்டிருக்கும் போது என்னைப் பார்த்து, "Hi, how's the day? How could I help you?" என்றார் கணவர். கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு நான் விவரத்தை சொன்னதும், அப்படி ஒரு கடையை அவர் பார்த்ததே இல்லை என்று மனைவியிடம் விசாரித்தார். பச்சை கலர் கட்டடம்  அதன் பின்னால் வட்டமாக கார் பார்கிங் இடமும் உள்ள அந்த கடைக்கு தான் ஒருமுறை சென்றிருப்பதாகவும், ஆனால் இடம் சரியாக நினைவில்லை என்றும் சொன்னாள் தலைவி.

உடனே தலைவர் டவுசர் பாக்கட்டில் இருந்து iPhone -ஐ எடுத்தார். சும்மா இருந்த செயற்கைக் கோலை சொறிந்து நான் சொன்ன முகவரியை GPS technology -ஐ கொண்டு தேடினார். அதை என்னிடம் காண்பித்து, "நாம் இப்போது இங்கே நிற்கிறோம், இப்படியே ஒரு மைல் தெக்கால போய், சோத்தாங்கை பக்கம் திரும்பினால் ஒரு பள்ளிக்கூடம் வரும், அதை ஒட்டி சிறிய பச்சை கட்டடம் இருக்கும் அதுதான் நீங்கள் தேடி வந்த கடை" என்றார்.
தலைவியும் அதை ஆமொதித்ததைத் தொடர்ந்து நன்றி சொல்லி விடைபெற்றேன். இப்போது சைக்கிளில் செல்லும் போது வேறு ஞாபகம் தொற்றிக்கொண்டது. விஞ்ஞான வளர்ச்சியை எண்ணி வியந்தேன், முகவரியை வைத்துக்கொண்டு நம்ம ஊரில் எத்தனை பேரிடம் வழி கேட்டிருப்போம், கதவு எண்ணை பார்த்துக்கொண்டு எத்தனை தெருக்கள் நடத்திருப்போம், இப்போது கணினியை தட்டினால் வரைபடம் வருகிறது, 500 ஆண்டுகளுக்கு முன் புவியியலாளர்கள் கப்பலில் பயணித்து கண்டறிந்த உலக வரைபடம் எப்படி செயற்கை கோல் வரைபடத்தோடு கச்சிதமாக ஒத்துப்போகிறது, என்றெல்லாம் வியந்து இறுதியாக அவர் சொன்ன அந்த பள்ளிக்கூடத்திற்கு வந்து சேர்ந்தேன். "Edmond Elementary School, 918 South Flood Street" என்று போட்டிருந்தது. பக்கத்தில் பச்சை கட்டடம் எதுவும் இல்லை. நான் தேடிவந்த கதவு எண் 309.

காணலில் கருகி நின்ற நான், என் அறை நண்பனுக்கு போன் செய்து, முகவரியை கணினியில் சரிபார்க்கச் சொன்னேன். 309 சரியான எண்தான் என்று சொன்னவன், கடையின் தொலைபேசி எண்ணையும் கொடுத்தான். கடைக்கு அழைத்து வழி கேட்டேன். 918 இல் இருந்து பின்னோக்கி வாருங்கள் 309 வரும் என்றார். இதைத் தான நாங்க எங்க ஊரிலும் செய்வோம், என்று வந்த வழியே பயணித்தேன். இப்பொது என் எண்ணங்கள் என்னவாக இருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வீடாகப் பார்த்து கடைசியில் எனக்கு வழி சொன்னவர் வீட்டுக்கே வந்து நின்றேன். வீடு பூட்டியிருந்தது,கதவு எண் 308 என்று போட்டிருந்தது, எதிரில் பார்த்தேன் "309 The Earth - Natural Food Store" என்ற பச்சை கட்டடம் இருந்தது. அடப்பாவிகளா எதிர்த்தாப்பல இருக்கிற கடையை இதுவரைக்கும் எட்டிக்கூட பார்த்ததில்லையா! பத்து மீட்டருக்கு அந்தப்பக்கம் இருக்கும் கடையை தேட ஆயிரம்  கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் இருக்கும் satellite தேவைப்படுது! தெக்கையும் வடக்கையும் என்னை அலைய விட்டதுதான் மிச்சம். 105 F சூட்டில் என் மனநிலை  உங்களுக்கு புரிந்திருக்கும்.

முழுவதுமாக dehydrate ஆகி கடைக்குள் சென்றேன், அது இயற்கையாக விளைத்த காய்கறிகள் விற்கும் கடை. அங்கிருந்த பெண் , Green Environment-ஐ ஊக்குவிக்க, சைக்கிளில் வரும் வாடிக்கையாளருக்கு 20% தள்ளுபடி தருவோம் என்று சொன்னார். காதில் தேன் வந்து பாய்ந்தது.