Thursday, February 27, 2014

தமிழுரை - அறிவுமதி, எழிலுரை - டிராட்ஸ்கி மருது

#தங்கத்தமிழ் , #Arivumathi , Trotsky Marudhu , Vikatan EMagazine

தமிழுரை - அறிவுமதி, எழிலுரை - டிராட்ஸ்கி மருது

"கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்"

(குறிஞ்சி - தலைவி கூற்று)
- கபிலர், குறுந்தொகை 38

காட்டுமயில் கற்பாறைகளில் இட்டுவைத்த
முட்டையொன்றை
வெயில்குளிக்கும்
கருங்குரங்குக்குட்டியொன்று
உருட்டிக்கொண்டிருக்கிறது.

குறுந்தொகையின் இந்த இரண்டு வரிகளுக்கு
இவ்வளவுதான் பொருளா?

இல்லைங்க.

இதற்குள் இருக்கும் பழந்தமிழர்தம் பல்லுயிர் சார்ந்த
அறிவியல் மூளையின் ஆற்றலை அறிந்தால்
அசந்துபோவீங்க.

ஆமாங்க.

இந்த முட்டையை இட்ட தாய் மயில்
என்ன ஆனது... தெரியல.
எங்கே போனது... புரியல.

தனித்துக்கெடக்குது
அந்த மயில் முட்டை.

தவித்துப்போகிறான் புலவன்.
வாழவந்த புலவன்தான். ஆனாலும் வாழ்ந்து கண்ட புலவன்.
அதனை அழகா எடுத்து ஒரு சிறிய குரங்குக்குட்டியோட
கையில் கொடுக்கிறான்.

அய்யோ... அய்யோ... அறிவுள்ள யாராவது... அத
அந்தக் குரங்குக்குட்டிகிட்டபோயி கொடுப்பாங்களா?

அது ஒடச்சிடுமே... அது ஒடச்சிடுமே!

நீங்க பயப்படுவீங்க.
ஏன்னா, நீங்க நாட்டுல வாழுறவங்க.
பயணங்கள்ல
ஊர்திகளை நிறுத்தி நிறுத்தித் தின்பண்டங்களைக் கொடுத்து
குரங்குகளைப் பிச்சைக்காரர்களா மாத்தினவங்கதானே.
ஏன்... அந்தமானில் வாழும்
பழங்குடி மக்களையும் அப்படித்தானே!

ஆனா... அந்தக் கபிலக் கிழவன் பயப்படலிங்க
அவனுக்குத்தான் காடு தெரியுமே; மலை தெரியுமே.
அவன் நம்மப்போல மனிதர்களுக்கான உலகத்துல
வாழப் பழகலயே.
உயிர்களுக்கான உலகத்துல வாழ்ந்த தமிழர்களோட அல்லவா
வாழப் பழகியிருக்கான்.

அதனாலதாங்க
அது கையில துணிச்சலாத்
தூக்கிக் கொடுத்துட்டான்.

அது என்ன செய்யுது?
மாலை வெப்பம் ஊறிய வழுவழுப்பான
பாறையில
ஒரே சீரா... அந்த மயில் முட்டைய
அது உருட்டிக்கிட்டிருக்கு.

அப்படின்னா...

ஒரு முட்டை குஞ்சு பொரிக்க... அதுக்கு என்னங்க வேணும்?
தாய் அந்த முட்டையின் மீது அமர்ந்து
அதன் அடிவயிற்றுச் சூட்டைத் தரவேணும்.
அதுதான் அந்த முட்டைக்குக் கிடைக்க வாய்ப்பில்லையே.

அப்படின்னா... அது குஞ்சு பொரிப்பதற்கான
சூடு?

அதாங்க... அந்தப் பாறையோட வெப்பச் சூட்டுல
அந்தக் குட்டி உருட்டுதுல்ல.
அந்தப் பாறை வெப்பத்தையே தாயின் அடிவயிற்றுச் சூடா
வாங்கி... வாங்கி...
அந்த முட்டை குஞ்சு பொரிக்குங்கிற
அறிவியல்நுட்பத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய
அந்த மூளை... எவ்வளவு எளிமையாச் சிந்திச்சிருக்கு பாருங்க!

ஆ. விகடன்
05-Feb-2014

No comments:

Post a Comment